ஒடிடியில் 2 தமிழ் பிளாக்பஸ்டர் படங்கள் வெளியானது..!!  

 

இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பொம்மை நாயகி’. நடிகர்கள் ஹரிகிருஷ்ணன், சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலீம்ஸ் இணைந்து தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசியிருந்த இப்படம், அதன் அழுத்தமான திரைமொழியால் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் இன்று மார்ச் 10-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

அதே போல் கவினின் டாடா படம் நல்ல வரவேற்பை பெற்று கவினுக்கென மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது.கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக அம்பேத் குமார் தயாரித்திருந்தார். கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, பாக்யராஜ், ஐஸ்வர்யா, பிரதீப், ஹரிஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று  10 ஆம் தேதி வெளியானது