தமிழில் ரீமேக்காகும் 49 ஆண்டுகால பிளாக்பாஸ்டர் காமெடி படம்..!

 

கொரோனா காலத்தில் மக்களை சிரிக்க வைக்கும் நோக்குடன் ‘காசேதான் கடவுளடா’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1972-ம் ஆண்டு தமிழில் சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான படம் ‘காசேதான் கடவுளடா’. நகைச்சுவையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தை கண்ணன் ரீமேக் செய்கிறார். முத்துராமன் வேடத்தில் ‘மிரிச்சி’ சிவா, தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகிபாபு, மனோரமா வேடத்தில் ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நவீன காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் கண்ணன், கொரோனா தொற்றால் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த காலத்தில் ஓ.டி.டி. தளங்களில் அதிகமாக மர்மம், திகில், கிரைம் படங்களே வருகின்றன. மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறோம். காசேதான் கடவுளடா படம் எக்காலத்துக்கும் பொருந்தும் கதையமைப்பை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.