மர்ம தேசம் தொடரில் நடித்த நடிகர் லோகேஷ் திடீர் தற்கொலை.. காரணம் இது தான்? தந்தை அதிர்ச்சி தகவல்

 

1990-களில் வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகர் லோகேஷ். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 6 அத்தியாயம் படத்தை இயக்கியுள்ள இவர், அம்புலி, ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக சி.எம்.பி.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதைக்கு அடிமையான லோகேஷ் தனது குடும்பத்தை பிரிந்து நண்பர்களுடன் வசித்து வந்ததும், குடும்ப பிரச்சினையால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த லோகேஷ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

லோகேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து நடிகர் லோகேஷின் தந்தை ராஜேந்திரன் கூறுகையில், “லோகேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால், மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு லோகேஷ் மனைவியுடன் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தார். 

வில்லிவாக்கத்தில் நான் தனியாக வசித்து வருகிறேன். திருமணத்திற்கு பின் லோகேஷ் தன்னுடனான தொடர்பை துண்டித்துக்கொண்ட நிலையில், இதுவரை இருமுறை மட்டுமே தன்னை சந்தித்துள்ளார். இறுதியாக கடந்த சனிக்கிழமை தன்னை சந்திக்க வந்த லோகேஷ், தன்னிடம் பணம் வேண்டும் என கேட்டுப் பெற்றுச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பது பற்றி தனக்கு தெரியாது. அவருக்கு எவ்வாறான குடும்ப பிரச்சினை என்பது குறித்தும் தனக்கு தெரியாது. விவாகரத்து குறித்து நோட்டீஸ் வந்த பிறகே கடந்த 6 மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வது பற்றி தனக்கு தெரியும்.

கடந்த திங்கட்கிழமை போலீசார் தகவல் தெரிவித்த பிறகே லோகேஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தனக்கு தெரியவந்தது. லோகேஷ் சிறந்த நடிகர், மர்ம தேசம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தெலுங்கில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் 150-க்கும் மேற்பட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

எம்.ஆர்.ராதா அவர்களின் தம்பி மகன் நான். ஆனால் மிகப்பெரும் நடிகரின் பரம்பரையைச் சேர்ந்தவன் என்றில்லாமல் சொந்த முயற்சியில் எனது மகனை நடிப்பில் முன்னேற வைத்தேன். லோகேஷ் உடலை பெற்றுச் செல்ல மருத்துவமனைக்கு வந்துள்ளேன். உடலை பெற்ற பின் வில்லிவாக்கம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல உள்ளேன். அவரது மனைவி அனிஷா நேற்று பார்வையாளர் போல் வந்து பார்த்துவிட்டு, உடல் தங்களுக்கு வேண்டாம் என தடையில்லா சான்று எழுதிக்கொடுத்து விட்டு சென்றுவிட்டார்” என்று கூறினார்.