நீண்ட வருடங்களாக கண்ட கனவை நனவாக்கிய நடிகை பிரியா பவானி சங்கர்..!!
செய்தி ஊடகத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார்.
இதையடுத்து வெள்ளித் திரைக்கு சென்ற பிரியா பவானி சங்கர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், யானை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது இந்தியன் 2, பொம்மை, அகிலன், ருத்ரன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானிசங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இதனால் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் “எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரையில் இருப்பது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று இருவரும் கனவு கண்டோம். இப்போது அந்த கனவு நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.