நடிகை சோனாலியின் சகோதரர் பரபரப்பு புகார்...என் சகோதரியை கொலை செய்து விட்டனர்...!!

 

2006-ம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அறிமுகமான சோனாலி போகத் (42), பின்னர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு, ‘அம்மா: ஏக் மா ஜோ லகோன் கே லியே பானி அம்மா’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் 2019-ல் ‘தி ஸ்டோரி ஆஃப் பத்மாஷ்கர்’ என்ற வெப்சீரிஸ் தொடரின் ஒரு பகுதியில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சோனாலி போகத், அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் பிஷ்ணோயை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில், ஆதம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக கோவா சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நிலை குறைவு காரணமாக வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சோனாலி போகத் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சோனாலியின் சகோதரர் ரிங்கு தாக்கா, ‘என் சகோதரி சோனாலியை, உடனிருந்த இருவர் கொலை செய்து விட்டனர். அவரது மரணத்துக்குப் பின் சோனாலியில் பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், கண்காணிப்பு கேமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன’ என கோவா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.