பிக்பாஸ் பிரபலத்துக்கு வந்த சோதனை..!!

 

நடிகர் மற்றும் பாடலாசிரியராக இருந்து வரும் சினேகன் தற்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். சினேகன் இதுவரை தமிழில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் மேல் பாடல்கள் எழுதியுள்ளார். எனவே சினேகன் தமிழின் மிக முக்கியமான பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார்.

அவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. திரைப்படம், அரசியல் என பிஸியாக இருக்கும் அவர், நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் ‘சினேகம் அறக்கட்டள' பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

பதிலுக்கு நடிகை ஜெயலட்சுமியும் பாடலாசிரியர் சினேகன் மீது புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தான் நடத்தி வரும் அறக்கட்டளை வழியாகவே சமூக பணிகளை செய்து வருவதாக தெரிவித்திருந்தார். தன் மீது அவதூறு பரப்பும் கவிஞா் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனா். ஆனால், யாா் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்த ஜெயலட்சுமி, சினேகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியா் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் நடிகை ஜெயலட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேநேரத்தில், தற்போது ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என்று சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சினேகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும்வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவித்துள்ளது. சாட்சிகளை கலைக்ககூடாது என்ற நிபந்தனைகளுடன் நீதிமன்றம் சினேகனுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.