கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குநர் சித்து திடீர் மரணம்!! திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல இயக்குநர் கங்கை அமரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி சித்து, அவர் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். அதன்பின் 1997-ம் ஆண்டு ‘காதலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் விக்னேஷ், தேவயானி, கரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, மன்சூர் அலிகானை கதாநாயகனாக வைத்து ‘ஆனா அந்தமடம் ஆகாட்டி சந்தை மடம்’ என்ற படத்தை இயக்கினார். படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் ‘ரோஜா’ உள்ளிட்ட பல்வேறு தொடர்களுக்கு வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் இருந்துள்ளார். தற்போது இயக்குநர் பாரதிராஜாவை விவசாயியாக நடிக்க வைத்து ‘கடைமடை’ என்னும் பெயரில் கிராமத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னையில் காலமானார். அதை தொடர்ந்து இயக்குநர் சித்துவின் உடல் அவரது சொந்த ஊரான சிவகிரிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சினிமா, மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்கள் சித்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

விரைவில் திரைக்கு வர உள்ள ‘பனை’ படம் இவரது தம்பி பொன்.ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் இன்னும் சில மாதங்களில் வெளிவர உள்ளது. பனை படத்தில் மறைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.