நற்செய்தி சொன்ன மருத்துவர்கள்..!!  ஓரிரு நாள்களில் வீடு திரும்பும் இயக்குநர் பாரதிராஜா!!

 

கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலின் உதவியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய பாரதிராஜா, 1977-ல் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

1990-களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜவுக்கு உண்டு. தற்போது படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, வைரமுத்து நேரில் சென்று நலம் விசாரித்தார். இளையராஜா உள்ளிட்ட திரைபிரபலங்களும், முதல்வர் ஸ்டாலினும் தொலைபேசியில் தொடர்புகொண்டு  நலம் விசாரித்தனர்.

ஆகஸ்ட் 26-ம் தேதி, மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், “பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க வருவேன்” என்று தெரிவித்திருந்தார். பாரதி ராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் விரைவில் நலம் பெறுவார் என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை தரப்பில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று செப்டம்பர் 2-ம் தேதி  பாரதிராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும்  மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.