பிரபல பாலிவுட் இயக்குநர் காலமானார்..!! 

 

ஆந்திர மாநிலம் கர்னூல் நகரில் பிறந்த எஸ்மாயீல் ஷ்ராஃப் (62), திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சவுண்ட் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். அதன் பின்னர், பீம் சிங்கிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் 1977-ம் ஆண்டு வெளியான ‘அகர்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, 1980-ல் வெளியான ‘தோடிசி பெவாஃபை’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் ராஜேஷ் கண்ணா, ஷபானா ஆஸ்மி, பத்மினி கோஹ்லாபுரே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது மற்றும் சில நகரங்களில் பொன்விழா கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புலுண்டி, அஹிஸ்தா அஹிஸ்டா, தில்... ஆகீர் தில் ஹை, ஜுதா சச், பிகல்டா ஆஸ்மான், காதல் 86, சூர்யா, போலீஸ் பப்ளிக், நிச்சாய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2004-ல் வெளியான தோடா தும் பட்லோ, தோடா ஹம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சில படங்களில் நடிகராகவும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் எஸ்மாயீல் ஷ்ராஃப் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் காலமானார். இவர் மாரடைப்பால் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.இவரது மறைவுக்கு நடிகர் கோவிந்தா, நடிகை பத்மினி கோலாபுரே மற்றும் இயக்குநர் அசோக் பண்டிட் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.