பிரபல மலையாள இயக்குநர் காலமானார்! 

 

1978-ம் ஆண்டு வெளியான ‘ஏகாகினி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜி.எஸ்.பணிக்கர், முதல் படத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். நடிகை ஷோபா, இந்திரபாலன், ரவி மேனன் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்தை அவரே தாயாரித்தார். எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘கருத்த சந்திரன்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படம் சிறந்த படத்துக்கான மாநில விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது. மேலும், மலையாளத் திரையுலகில் தயாரிக்கப்பட்ட முதல் சாலைத் திரைப்படமாகக் கருதப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து, சேதுவின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாக கொண்டு அதே தலைப்பில் ‘வசரஷய்யா’, ‘சஹ்யந்தே மகன்’, ‘பிரகிருதி மனோஹரி’, ‘பூதப்பாண்டி’ மற்றும் ‘பாண்டவபுரம்’ போன்ற பல திரைப்படங்களை ஜி.எஸ்.பணிக்கர் இயக்கினார். சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், 2018-ம் ஆண்டு, ‘மிட் சம்மர் ட்ரீம்ஸ்’ என்ற படத்தை மீண்டும் இயக்க இருந்த நிலையில் அப்படம் தொடங்காமலேயே கைவிடப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் வசித்து வந்த அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 

அதையடுத்து சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.