பிரபல வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்..!!

 

1928-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சந்திர புதுகுளத்தில் வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். இவர் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.

தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதை தொகுப்பு மூலம் பிரபலமடைந்த சுப்பு ஆறுமுகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன் முதலாக வில்லுப்பாட்டாக பாடினார்.

மேலும் கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நடிகர் நாகேஷின் ஏறக்குறைய 60 திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதி அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களிலும் பங்களிப்பை வெளிபடுத்தி வந்தார். மேலும் காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார்.

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார். 1975-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

அவரது இசைப்பணி காரணமாக வில்லிசை வேந்தர் என போற்றப்படுவதுடன் மத்திய அரசின் சார்பில் உயரிய விருதுககளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கடந்த 2021-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. இதேபோல் கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் வழங்கப்பட்ட கௌரவிக்கப்பட்டுள்ளது.