பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி கிட்னி செயலிழப்பு..!!கண்ணீர் விட்டு கதறிய நடிகர்!

 

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் போண்டா மணி. தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். வடிவேலு பீக்கில் இருந்தபோது அவருடைய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தவர்.

1991-ம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போண்டா மணி, சுமார் 270 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலக் கட்டத்தில், கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து காமெடி செய்தவர், போண்டா மணி.

பிறகு நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய காமெடி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். வடிவேலுவுடன், இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் சக நடிகர்களான பெஞ்சமின் கிங்காங் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டாமணி அனுமதிக்கப்பட்டார் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் மேல் சிகிச்சைக்கு உதவி கோரி நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்டது.


அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காணொலியைப் பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு உதவும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்து பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் நுழைந்தவர். தனியாகவே இந்தியாவுக்கு வந்தார், அவர் தனியாக குழந்தைகளை விட்டுவிட்டு போய்விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை அவருக்கு உதவ வேண்டும்” என்று கண்ணீர்மல்க பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்