பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் தாயார் காலமானார்..!!

 

1992-ல் ராம்கோபால் வர்மா இயக்கிய ‘ராத்ரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மணிசர்மா. அடுத்ததாக அவர் இயக்கிய ‘அந்தம்’ படத்துக்கும் இசையமைத்தார். இவ்விரு படங்களும் இந்தியிலும் வெளியாகின. 1990-கள் முழுவதும் நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றி முன்னணி இடம் வகித்தார். புத்தாயிரத்திலும் அந்த வெற்றிப் பயணத்தை சீராகவும் சிறப்பாகவும் தொடர்ந்தார்.

2001-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘நரசிம்மா’ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் மணிசர்மா. அடுத்ததாக விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. அதனைத் தொடர்ந்து ‘யூத்’, 'ஆசை ஆசையாய்', 'அரசு', 'அலாவுதீன்', 'ஆஞ்சநேயா', 'கம்பீரம்', 'மலைக்கோட்டை', 'ஆர்யா' என பல படங்களில் வெற்றிப் பாடல்களை வழங்கினார்.

இந்நிலையில் மணிசர்மாவின் தாயார் சரஸ்வதி (88) உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சென்னையில் உள்ள மணிசர்மாவின் சகோதரர் ராமகிருஷ்ணாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவர் உயிர்பிரிந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் மணிஷர்மாவின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ரெபெல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு மரணச் செய்தி மறக்கும் முன், மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.