வீராங்கனை பிரியா மரணம் குறித்து ஜி.வி. பிரகாஷ் உருக்கமான பதிவு…!!

 

கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்துவந்ததோடு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தும் வந்தவர் சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி பிரியா. 

இந்த நிலையில், சமீபத்தில்  கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இவருக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்றதால், மேல் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். உயிரை காப்பாற்ற வழியில்லாமல், வேதனையோடு கால்பந்து வீராங்கனையின் கால்களை அகற்ற சம்மதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால்கள் அகற்றப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும்  எதிர்பாராத விதமாக அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரியாவின் மரணம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் பதிவில், ‘“என் Game என்னை விட்டு போகாது,Come back கொடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya’  என்று கூறியுள்ளார்.