கே.ஜி.எஃப். 3 எப்போது என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு... நடிகர் யாஷ் கொடுத்த பதில் இது தான்..!!
2018 ஆம் ஆண்டு இறுதியில் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுநாள் வரையில் வெளிவந்த சிறந்த டான் படங்களில் ஒன்றாக இந்த படம் கொண்டாடப்பட்டது.
படத்தின் முடிவில் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கம் குறித்த காட்சி இடம் பெற்றதால், பார்ட் 2 எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கிடையே, கொரோனா காரணமாக படத்தின் வெளியீடு 2021 ஜூலை மற்றும் 2022 ஜனவரி என இருமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் இறுதியாக 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல் பாகத்தில் இரண்டாம் பாகத்திற்கான தொடக்கம் குறித்து கூறப்பட்டதை போல, இரண்டாம் பாகத்திலும் மூன்றாம் பாகத்திற்கான அடித்தளம் போடப்பட்டிருக்கும்.
ஆனால், படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்திற்கு பிறகு, தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை முடித்துக் கொண்டு ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். ஆனால் கேஜிஎஃப் ஹீரோ யாஷ் அடுத்ததாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் கே.ஜி.எஃப். 3 ஆம் பாகத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், நடிகர் யாஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், “எனது அடுத்த படம் கே.ஜி.எஃப். 3வது பாகம் அல்ல. தற்போது உடனடியாக கே.ஜி.எஃப். 3 ஆம் பாகம் தொடங்கும் எண்ணம் இல்லை. எனது அடுத்த படம் குறித்து வெளிவரும் எந்தவொரு வதந்திகளையும் நம்பாதீர்கள். நான் வித்தியாசமான படத்தில் நடிக்க விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.