மூன்று விருதுகளை தட்டி தூக்கிய கர்ணன் திரைப்படம்..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் கர்ணன். இப்படத்தில் லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் SIIMA விருதுக்கான விழா நேற்று முன்தினம் பெங்களூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கே.ஜி.எஃப் நடிகர் யஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகர் கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், லோகேஷ் கனகராஜ், ஆர்யா, சிவா, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்காக மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை சந்தோஷ் நாராயணன் வென்றார். சிறந்த துணை நடிகைக்கான விருதை லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி வென்றார். சிறந்த பின்ணனி பாடகிக்கான விருதினை தீ வென்றுள்ளார் ஆனால் அவர் சார்பாக அந்த விருதினை சந்தோஷ் நாராயணன் பெற்றுக்கொண்டார்.