முன்னணி சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!
 

 

70 மற்றும் 80-களில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 படங்களுக்கு மேல் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 

பொதுவாக ரஜினி என்றாலே ஜூடோ ரத்னம்தான் என சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றவர். இதுவரையில் ரஜினியின் 46 படங்களுக்கு ஜூடோ ரத்னம்தான் சண்டை இயக்குநராக இருந்திருக்கிறார்.

இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான ‘பாண்டியன்’ படம் வரையில் அவர் சண்டை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தவிர, ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 1,200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று உடல்நலக்குறைவால் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் காலமானார். ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.