பெங்களூருக்கு தனி விமானத்தில் சென்றடைந்த ரஜினிகாந்த்!!

 

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிப்பதோடு மட்டுமின்றி ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க வேண்டும் என ரசிகர்கள் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு மிக உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று மாலை விதான் சவுதாவில் நடக்கிறது. நிகழ்ச்சியில் அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்குகிறார். 

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி தனி விமானம் மூலமாக பெங்களூரு வந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் வரவேற்றார். கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது,  சாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தின் 67வது உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மறைந்த புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை என அவர் கூறினார்.