மத்திய அமைச்சரிடம் தமிழக தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை..!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு திரைப்படங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர 10 சதவீதம் டிடிஎஸ் ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கு மிகப்பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாக தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மேலும், இந்த வரியை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இருந்தனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில் திரையரங்கு வெளியீடு, தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் உள்ளிட்ட திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், டிடிஎஸ் ஆக வசூலிக்கப்படும் 10 சதவீதத்தை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பெப்சி தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நேரடியாக டெல்லி சென்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.