நான் தனியாக இல்லை என உணர வைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி  - நடிகை சாய்பல்லவி..!!

 

 2017-ம் ஆண்டு வெளியான ஃபிதா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாரி 2 படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை சாய் பல்லவி.

அதன்பின் கரு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், மாரி 2 படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார்.

சாய் பல்லவி தற்போது தெலுங்கில் வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா டகுபதிக்கும் ஜோடியாக விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று முன்தினம் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட் ரோலில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சாய் பல்லவி, “காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வீடியோ வைரலாகி, சர்ச்சை கிளப்பியது. இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க மறுபக்கம், பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சாய் பல்லவியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர்.

சாய் பல்லவி மத வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசியதாக சில அமைப்புக்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்ததுடன், வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து சாய் பல்லவி மீது எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தன்னை வைத்து கிளப்பப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பேச்சிற்கு விளக்கம் அளித்து சாய் பல்லவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “விளக்கம் அளிப்பதற்காக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். முதன்முறையாக நான் பேச நினைப்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து மனதிலிருந்து பேசுகிறேன். காரணம், நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அண்மையில் நடந்த நேர்காணல் ஒன்றில், 'நீங்கள் வலதுசாரி ஆதரவாளரா? அல்லது இடதுசாரி ஆதரவாளரா?' என என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நான் நடுநிலையானவர் என்று கூறினேன். முதலில் நாம் மனிதநேயமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் நமது அடையாளங்கள் எல்லாம் என கூறினேன். எதுவாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் முதலில் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறி இரண்டு உதாரணங்களைச் சொன்னேன். 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தைப் பார்த்தேன். 3 மாதங்களுக்கு முன்பு ஒருமுறை படத்தின் இயக்குநரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம், படம் என்னை பாதித்தது குறித்தும், பாதிக்கப்பட்ட அம்மக்களின் அவலநிலையைக் கண்டு நான் வருந்தியது குறித்தும் இயக்குநரிடமே கூறியிருக்கிறேன்.

எந்த வகையில் வன்முறை நிகழ்ந்தாலும் அது தவறுதான். எந்த மதத்தின் பெயரில் அது நிகழ்ந்தாலும் அது பெரிய குற்றம்தான். இதுதான் நான் சொல்ல வந்த கருத்தின் சாரம்சம். நிறையபேர் சமூக வலைதளங்களில் கும்பல் வன்முறைகள் குறித்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். ஒருவரை கொல்வதற்கு மற்றவருக்கு எந்தவித உரிமையுமில்லை. மருத்துவம் பயின்றவர் என்ற முறையில் அனைவரின் உயிரும் முக்கியமானது; அனைவரின் உயிரும் சமமாக கருதப்பட வேண்டியது.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு அடையாளத்தை சுமந்துகொண்டிருக்கிறது. என்னுடைய 14 வருட பள்ளி காலத்தில் ஒவ்வொரு நாள் பள்ளிக்குச் செல்லும்போது, இந்நாட்டின் அனைத்து குடிமக்களும் எனது அண்ணன், தங்கைகள், நான் என் நாட்டை நேசிக்கிறேன். இந்தியராக பெருமை கொள்கிறேன் என உறுதிமொழியேற்பேன். இது அனைத்தும் எனக்குள் ஆழமாக பதிந்திருக்கிறது.

பிள்ளைகளாக இருந்த நாங்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் கலாசாரம் அடிப்படையில் ஒருவரையொருவர் வேறுபடுத்தி அணுகியதில்லை. நான் எப்போது பேசினாலும் நடுநிலை பேணியே என் கருத்தை முன்வைப்பேன். ஆனால், என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முக்கியமான பிரபலங்களும், இணையதளங்களும் முழுமையான என் நேர்காணலை பார்க்காமல் கருத்து கூறியது வேதனையளிக்கிறது.

எனக்காக நின்ற உள்ளங்களுக்கு நன்றி. எனக்காக குரல் உயர்த்திய உள்ளங்களுக்கு நன்றி. நான் தனியாக இல்லை என உணர வைத்தவ உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.