‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...’ ‘இதயம்' திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவு!

 

எந்த அலட்டலும் இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் மட்டுமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர்தான் நடிகர் முரளி. அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் ரொம்பவே அதிகம்.

முரளியின் அப்பா பிரபலமான தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு சினிமாவுக்குள் வருவதற்கு எந்த தடையும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் பூவிலங்கு திரைப்படத்தில் இவர் அறிமுகமாகிய போது இவர் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது. இவருடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்த நடிகைகளும் உண்டு.

ஆனால் அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களையும் ஒரே படத்தில் தட்டி தூக்கினார் நடிகர் முரளி. இன்று வரை அந்த ஒரு படம் தான் முரளிக்கு இன்றைய சினிமா ரசிகர்களிடம் ஒரு அடையாளமாக இருக்கிறது. முரளி அந்த படத்திற்கு ஓகே சொன்ன விதத்தை ரொம்பவே சுவாரசியமாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த படத்தில் அப்படி என்ன சுவாரசியம் என்றால் படத்தின் இயக்குனர் கதிர் ஒரு நிமிடத்தில் கதை சொல்லி முரளியிடம் ஓகே வாங்கி இருக்கிறார். அந்த ஒரு நிமிடத்தில் முரளி ஓகே சொன்ன அந்த படம் சில்வர் ஜூப்ளியாக வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. மேலும் அவர் நூற்றுக்கு மேல் படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவருக்கான ஒரு மிகப்பெரிய அங்கீகாரம்.

1991 ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கதிர் இயக்கி முரளி நடித்த இதயம் திரைப்படம் தான் அது. முதலில் கதிர் சத்யஜோதி பிலிம்ஸ் இடம் இந்த கதையை சொன்ன போது முரளியின் கால்ஷீட் இருந்தால் பண்ணுகிறோம் என்று சொன்னார்களாம் . கதிரும் முரளியை தேடி சென்றிருக்கிறார். முரளியும் திண்டுக்கல் சூட்டிங் செல்ல இருப்பதால் நேரமில்லை என்று சொன்னாராம்.

முரளியின் அவசரத்தை புரிந்து கொண்ட கதிர் ஒரு நிமிடத்தில் இதயம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை சொல்லி இருக்கிறார். கதை பிடித்து போன முரளி உடனே சத்யஜோதி பிலிம்ஸ் போன் செய்து எனக்கு கதை ஓகே இந்த படத்தை நான் பண்ணுகிறேன் என்று கூறினாராம். இதயம் படத்தின் கதை எப்படி முரளிக்கு ஒரே நிமிடத்தில் பிடித்துவிட்டதோ அதேபோல் ரசிகர்களுக்கும் பிடித்து விட்டதால் வெள்ளி விழா கண்டது.

இந்நிலையில் ‘இதயம்' திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்