ஹீரோவானார் ’ஆடுகளம்’ முருதாஸ்..!

 

ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உறுதுணை கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்த முருகதாஸ் ராஜாமகள் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஹிர்த்விக் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் அனுமந்தங்குடி பி. முருகேசன் தயாரித்து வருகிறார். இப்படத்தை ஹென்றி என்பவர் இயக்கி வருகிறார்.  ராஜாமகள் படத்தில் கன்னிமாடம் புகழ் வெலினா நாயகியாக நடிக்கிறார். சங்கர் ராஜன் இசை அமைக்கிறார். படத்தில் ஒளிப்பதிவு பணிகளை நிக்கி கண்ணன் மேற்கொள்கிறார். 

நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் தந்தையாக முருகதாஸ் நடிக்கிறார். தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசப் போரட்டத்தை பேசும் படமாக இது இருக்கும் என்று இயக்குநர் ஹென்றி தெரிவித்தார்.

ராஜாமகள் படத்திற்கான படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலும், மகாபலிபுரம், திருத்தணி போன்ற சென்னையை விட்டு வெளியேயும் நடந்து வந்தது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.