லவ் டுடே ரீமேக்கில் ஆமிர் கான் மகனுடன் ஜோடி சேரும் ஸ்ரீதேவி மகள்..!!

தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த லவ் டூடே படத்தின் இந்தி ரீமேக்கில், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களின் வாரிசுகள் இணைந்து நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

கடந்த 2022-ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் ‘லவ் டுடே’. ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் புரிந்து, பெரும் சாதனை படைத்தது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மீண்டும் சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பதற்கான ஊக்கத்தை இப்படம் அளித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், லவ்டுடே தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி, அங்கேயும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த ரீமேக் பதிப்பில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தியிலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதனுடன் பாண்டோம் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.