கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சிலம்பரசன் அஞ்சலி..!

 

நுரையீரல் அழற்சி காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் நெடு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவு செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கு பெருந்திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் .

திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர் .

இதையடுத்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் இறந்து 1 மாத காலம் ஆக உள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் தேமுதிகவின் தொண்டர்கள் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து இன்று சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த்தின் இல்லத்திற்கு வந்த நடிகர் சிலம்பரசன் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கேப்டனின் மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களிடம் ஆறுதல் கூறிய நடிகர் சிலம்பரசன் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றுள்ளார்