ட்விட்டரிலிருந்து நடிகை குஷ்பு திடீர் விலகல்!

 

ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90-களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.

ஒருவருடைய அரசியல் வாழ்க்கையில் சமூக வலைதளங்கள் தற்போது மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்றன. நடிகை குஷ்புவும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பிரபலமாக இருந்து வந்தார். தன்னுடைய கருத்துக்களை அவற்றில் துணிச்சலாக பதிவிடும் அவர் பலரின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துகளையும் அதில் தயங்காமல் முன்வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த குஷ்பு தற்காலிகமாக அவற்றிலிருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலம் விலகிச் செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள். நன்றாக இருங்கள், நேர்மறையாக இருங்கள், அனைவரையும் நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


குஷ்புவின் இந்த திடீர் அறிவிப்பு சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.