‘லியோ’ வெற்றி விழாவுக்குப் பிறகு ரத்னகுமார் சொன்ன அதிர்ச்சி தகவல்..! 

 

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழா நடந்து முடிந்த மறுநாளான நேற்று (நவ.02) தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், “எழுத்துப் பணிக்காக ஆஃப்லைன் செல்கிறேன். எனது அடுத்த பட அறிவிப்பு வரும் வரை சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

’லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசிய கருத்துகள் சர்ச்சையானதால்தான் அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விழாவில் நேற்று பேசிய ரத்னகுமார், “விஜயின் படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசிக்கு கீழ் வந்துதான் ஆக வேண்டும்” என்று கூறினார்.இதைவைத்து ரஜினியைத்தான் ரத்னகுமார் வம்பிழுப்பதாக ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டின்போது, ‘கழுகு உயரே பறந்து கொண்டிருக்கும். காக்கை அதனை தொந்தரவு செய்யும்’ என்று ரஜினி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.