சம்பவம் லோடிங்..!! மே 1ம் தேதிக்கு காத்திருங்கள்..!!

துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62-வது படம் தொடர்பான அப்டேட், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
 

போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படம் பொங்கலுக்கு வெளியான நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னதாக அஜித்தின் அடுத்த படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும், அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்கிற தகவல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் துணிவு படம் வெளியாகி, அதற்கான வரவேற்பு சிறப்பாக அமைந்தது. அதற்கு அடுத்தபடியாக அஜித் நடிக்கும் படம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை மிகவும் மெல்லிய உணர்வுகளை பிரதிபலிப்பதாக கூறி, லைகா நிறுவனம் அதிருப்தி தெரிவித்தது.

இதனால் எழுந்த பிரச்னையில், விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். நடிகர் அஜித்தும் கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பல இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய லைகா, கடைசியாக மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது.

அஜித்தின் 62-வது படத்தை அவர் தான் இயக்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. குடும்பத்துடன் அஜித் உலக சுற்றுலா சென்றது, எதிர்பாராமல் நடந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியனின் மறைவு உள்ளிட்ட காரணங்களால் அஜித் 62 பட அறிவிப்பு மேலும் தாமதமானது.

இந்நிலையில் வரும் மே 1-ம் தேதி அஜித்துக்கு 52-வது பிறந்தநாள். அப்போது ‘அஜித் 62’ படம் தொடர்பான அறிவிப்பை லைகா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித்தின் பிறந்தநாளை எதிர்பார்த்து, அவருடைய ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.