டைட்டிலே இன்னும் வர்ல... அதுக்குள்ள ரிலீஸ் தேதியா..? சுதா கொங்கரா அப்டேட்..!!

இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்த படத்துக்கு டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் கவனமீர்த்துள்ளது. 
 

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு, சுதா கொங்கரா நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தங்கம் மற்றும் மற்றும் அமேசான் பிரைமில் வெளியான புத்தும் புது காலை என 2 அந்தாலாஜி படங்களை இயக்கினார். அதை தொடர்ந்து அஜித், சிம்பு உள்ளிட்டோர் படங்களை அவர் இயக்குவதாக கூறப்பட்டது. நடிகர் விஜய்யின் படத்தை அவர் இயக்குவதற்கான வாய்ப்பு வந்து, பேச்சுவார்த்தையுடன் நின்றுவிட்டது.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை அடுத்ததாக அவர் இந்தியில் இயக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டது. தமிழில் இப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவே, இந்திப் பதிப்பை தயாரிக்கவுள்ளார். கதாநாயகனாக அக்‌ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் கதாநாயகியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரான சூரரைப் போற்று படம், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியானது. அதனால் திரையரங்கத்தில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனினும் கடந்தாண்டு இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த படம் என முக்கியமான 5 பிரிவுகளில் தேசிய விருதை வென்றது.