ஒரே படத்தில் கதாநாயகன், கதாநாயகியான பாவ்னி மற்றும் அமீர்..!!
 

பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாவ்னி மற்றும் அமீர், விரைவில் வெளிவரவுள்ள புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாவ்னி, தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமானார்.  கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் ஒளிப்பரப்பான பாசமலர் என்கிற சீரியலில் நடிக்கும் போது, உடன் நடித்த பிரதீப் குமார் என்பவரை காதலித்தார்.  அவரை பெற்றோர் சம்மத்துடன் 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

மே 17-ம் தேதி நடிகர் பிரதீப் குமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மரணத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரியாது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மரணம் தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து பாவ்னி பல்வேறு சீரியல்களில் நடித்தார். ஆனால் எதுவும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. அப்போது தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதன்மூலம் நிகழ்ச்சிக்குள் வந்தவர், அமீருடன் நெருக்கமானார்.

சக போட்டியாளர்களிடம் பாவ்னியை காதலிப்பதாக அமீர் கூறினார். விரைவில் இருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். தற்போது அவர்கள் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக ’லிவிங் டுகெதரில்’ இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் பாவ்னி மற்றும் அமீர் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் ஏற்கனவே ‘துணிவு’ படத்தில் காதலர்களாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அமீர் சொந்தமாகவே இயக்கி நடிக்கிறார். ஷபீ என்பவர் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் அமீர் மற்றும் பாவனி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளது