ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு... தளபதி விஜய் சொன்ன 'குட்டி ஸ்டோரி'..!

 

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்தது.. மேலும் முதல் வாரத்தில் 'லியோ' திரைப்படம் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் லியோ படத்தின் அனுபவம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பேசினர். அதன்பிறகு வெற்றி விழா நிறைவில் மேடை ஏறிய நடிகர் விஜய், லியோ படத்தில் இடம்பெற்று இருக்கும் 'நா ரெடி' பாடலை பாடி, நடனமும் ஆடி ரசிகர்களை குஷி படுத்தினார்.  

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் விஜய், "உங்களுக்காக என் தோலை செருப்பா தச்சா கூட உங்க அன்புக்கு ஈடு ஆகாது, என்னைக்குமே உங்களுக்கு உண்மையா இருப்பேன். எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும், அதுக்கு நம்ம பசங்க தான் காரணமா இருக்கனும்" என்று அவர் கூறினார். 

தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், குட்டி ஸ்டோரி ஒன்றை கூறினார். அதில், "ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு, இன்னொருத்தர் ஈட்டியோட போய் யானைக்கு குறி வச்சு ஒன்னும் கிடைக்காம திரும்பி வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்..? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர்... எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க. நம்மளால எதை ஜெயிக்க முடியுமோ அதை செய்வோம். ஜெயிக்க முயற்சி செய்யும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு இடம் இருக்கும். பெருசா கனவு கானணும் நண்பா" என்று அவர் கூறிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ",