எதிர்ப்பு எதிரொலி- வைரமுத்துவுக்கு விருது வழங்கும் முடிவில் மாற்றம்..!!

 

தமிழ் சினிமா பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவுக்கு கேரள மாநிலத்தின் உயரிய விருது வழங்குவதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் ஒ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மலையாள மொழியின் முக்கிய எழுத்தாளர் மற்றும் கவிஞராக இருந்தவர் ஒ.என்.வி குரூப். ஞானபீட விருது பெற்ற அவர் மறைந்த பிறகு ஒ.என்.வி பெயரில் விருது ஒன்றை நிறுவியது கேரள அரசு.

ஆண்டுதோறும் இலக்கிய துறையில் சாதனை படைத்தோருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதன்முதலாக கேரளாவைச் சேராத வெளிமாநிலத்தவரான வைரமுத்துவுக்கு வழங்குவதாக கேரள அரசு அறிவித்தது.

இதற்கு நடிகை பார்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வைரமுத்துவுக்கு ஓ.என்.வி பெயரில் எப்படி விருது வழங்கலாம் என கேள்வி எழுப்பி இருந்தார். இது அவருக்கு செய்யும் அவமரியாதை எனவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பலரும் பார்வதி கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள அரசின் முடிவை பரிசீலிக்கும் படி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் இந்தாண்டு ஓ.என்.வி இலக்கிய விருது வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது.