பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்: விஜய்சேதுபதி விளக்கம்

 

நடிகர் விஜய்சேதுபதியை பெங்களூரு விமான நிலையத்தில் பின்னால் இருந்து ஒருவர் ஓடி வந்து தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விஜய்சேதுபதியை எதற்காக தாக்கினார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விஜய்சேதுபதி தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை, ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்ததால் சிறிய பிரச்சினை ஏற்பட்டு பெரிதாகி விட்டது. தாக்கியவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் முக கவசம் அணிந்து இருந்ததால் போதையில் இருந்தது தெரியவில்லை. எங்களுடன் வாக்குவாதம் செய்தார்.

விமானம் தரையிறங்கிய பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது. அவர் எனது ரசிகர் இல்லை. இப்போது செல்போன் வைத்திருக்கும் அனைவருமே இயக்குநர்கள்தான். நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வது இல்லை. 30 ஆண்டுகளாக எனது நண்பராக இருப்பவரைத்தான் எப்போதும் உடன் அழைத்துச் செல்கிறேன். யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாவலர்களுடன் செல்ல நான் விரும்புவது இல்லை. எனக்கு மக்களை சந்திக்க வேண்டும். அவர்களோடு பேச வேண்டும்” என்றார்.