அசத்தல் வீடியோ..! ‘வேட்டையன்’ பட பாடல் ஒலிக்க, ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் நடனமாட
சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்து இதில் பணியாற்றி வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார்.
பான் இந்திய திரைப்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதே போல ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. அந்தப் பாடலுக்கு தான் ‘கூலி’ செட்டில் ரஜினிகாந்த் நடனமாடி உள்ளார்.
இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘வேட்டையன்’ பட பாடல் ஒலிக்க, ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் நடனமாடி அசத்தி உள்ளார்.