#BREAKING: லண்டனில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கவலைக்கிடம்..!!

கர்நாடக இசைக் கலைஞரும் திரைப்பட பின்னணிப் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் நகரில் பாம்பே ஜெயஸ்ரீ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக லண்டனிலுள்ள ஹோட்டலில், தனது இசைக்குழுவுடன் தங்கி உள்ளார். நேற்று இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாக அவர் தன்னுடன் தங்கி இருந்த நபர்களிடம் கூறியுள்ளார். அதையடுத்து இன்று காலை அவர் உணவு சாப்பிடவும் வரவில்லை. 

இதையடுத்து அவருடைய அறைக்கு சென்று பார்த்த போது, பாம்பே ஜெயஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. அவருக்கு நினைவு திரும்பி, உடல்நிலை சீரான பிறகு பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கு வந்து தொடர் சிகிச்சைகள் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாம்பே ஜெயஸ்ரீ தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். திரை இசைப்பாடல்களும் பாடியுள்ளார். 

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான லைஃப் ஆஃப் பை படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ ஒரு தாலாட்டு பாடலை எழுதி பாடி இருந்தார். அதற்காக அவர் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் விருது கிடைக்கவில்லை. எனினும் ஆஸ்காருக்காக இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட முதல் பாடகி என்று பெருமை அவருக்கு கிடைத்தது. சமீபத்தில் மியூசிக் அகாடமியால் அவருக்கு சங்கீதா கலாநிதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.