மறைந்த நடிகர் விவேக்கிற்கு மத்திய அரசு கவுரவம்- விரைவில் அறிவிப்பு..!
 

 

மாரடைப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை கவரவிக்கும் பொருட்டு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டு காலம் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சி வந்த நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருடைய திடீர் மறைவு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

வெறும் சினிமாவில் மட்டும் நடித்துக் கொண்டிருக்காமல் பல்வேறு சமூகப் பணிகளில் நடிகர் விவேக் ஈடுபட்டு வந்தார். அதில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விருப்பத்திற்கு இணங்க தமிழக முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் முயற்சியில் இருந்து வந்தார்.

ஆனால் அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதுவரை அவர் 33 லட்சம் மரக்கன்றுகளை மட்டுமே நட்டு வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடைய மறைவை தொடர்ந்து பல்வேறு சினிமா பிரபலங்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரக்கன்றுகளை நினைவாக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு நடிகர் விவேக் வழங்கி வந்த பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருடைய புகைப்படம் அடங்கிய தபால் தலையை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.