600-க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த விஜய்..!!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனைப் படைத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்ளஸை பரிசாக வழங்கினார் நடிகர் விஜய்.
 

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு “விஜய் கல்வி விருது” என்கிற பெயரில் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நடிகர் விஜய் கவுரவித்தார். 

இந்நிகழ்வில் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் அரசுப் பள்ளி மாணவி நந்தினிக்கு சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது. குடும்பத்துடன் மேடை வந்த நந்தினியை பொன்னாடை போர்த்தி விஜய் வரவேற்றார்.

அதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் மட்டும் ஊக்கத் தொகை வழங்கிய விஜய், கையில் இருந்த நகைப்பெட்டியை நந்தினியின் தாயாரிடம் வழங்கினார். இதை சற்றும் எதிர்பாராத தாயார் ஆச்சரியமடைந்தார். 

உடனடியாக அவரிடம்  மாணவி நந்தினிக்கு வைர நெக்ளஸை போட்டுவிடும் படி விஜய் சொன்னார். தாயாரும் நகையை எடுத்து மகளின் கழுத்தில் மாட்டிவிட்டார். இதை கண்டதும் ஒட்டுமொத்த அரங்கமுமே கைத்தட்டி ஆரவாரம் செய்தது.