சிஐடி சகுந்தலா காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

 
 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமான சகுந்தலா அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.

‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.

சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, செப்.17 நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.