தளபதி பயோகிராஃப்: பகுதி 01

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் என பிரபல ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் அவர். பல படங்களை தயாரித்திருக்கிறார். பெயரும், புகழும், பொருளும் சம்பாதித்தாகிவிட்டது... இனி சினிமா வேண்டாம்... என்று திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார் அந்த இயக்குநர். தன்னுடைய மகன் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படவே, அப்போது திரையுலகில் ரொம்ப முக்கியமான பெரிய இயக்குநர்கள் எல்லோரிடமும் அழைத்துச் சென்று காட்டி, "சார்... என் பையனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கி கொடுங்கள். எவ்வளவு செலவு என்றாலும் நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னார். ஆனால், அந்த இளைஞனை வைத்து படம் செய்ய யாரும் தயாராக இல்லை.

சரி, தானே மறுபடியும் இயக்குநராகி, மகனை வைத்து சொந்தமாக படங்களை எடுக்கலாம் என்று ஷூட்டிங் கிளம்பினார். ஆனாலும், மகனை வைத்து விபரீத பரிட்சை செய்கிறார் என்று இன்டஸ்ட்ரியில் பேச்சுதான் கிளம்பியது. அந்த இளைஞனின் முதல் படம் பிரம்மாண்டமாக எடுக்கப்படவில்லை! அதிக செலவு செய்யப்படவில்லை; பிளாக் பஸ்டர் ஆகவில்லை; ரசிகைகள் காத்திருக்கவில்லை! இவ்வளவு ஏன்? சினிமா ரசிகர்களில் பலர் அவரை அடையாளம்கூட கண்டு கொள்ளவில்லை! அவரின் அறிமுகப்படம் அப்படியொரு ஃபிளாப்..!

ஆனாலும் அந்த இயக்குநர் சோர்ந்து போகவில்லை. இளைஞர்களைக் கவரும் விதத்தில், தன்னுடைய மகனை வைத்து படங்களை எடுத்துத் தள்ளினார். அப்போது, "அப்பாவும்; புள்ளையும் சேர்ந்து கூத்தடிக்கிறாங்கப்பா..! படம் புடிக்க கேமராவும், கிளாமர் காட்ட நடிகையும் கெடச்சாப் போதும். ஷூட்டிங் கெளம்பிடறாங்க..!" என்கிற பரிகாசப் பேச்சுதான் பட உலகம் முழுவதும் பரவியது... இது அந்த இளைஞனின் ஹீரோ இமேஜை மேலும் டேமேஜ் ஆக்கியது! எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு, என்னுடைய பணி சினிமாவில் நடிப்பது என்று சின்சியராக இருந்தார் அந்த இளைஞன். அவரது வாழ்விலும் மேஜிக் நடந்தது... தொட்டதெல்லாம் ஹிட், நடனத்துக்கு இவர்தான் அகராதி, ராணுவம் போன்ற ரசிகர் பட்டாளம், பெண்களிடத்தில் பேராதரவு என சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தி ஆனார்..! மற்ற நட்சத்திரங்கள் நடுவே; அவரொரு துருவ நட்சத்திரமாக மாறினார். அந்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன்..! அந்த நடிகர், விஜய்..! அந்தப் படம் நாளைய தீர்ப்பு...! எப்படி நடந்தது இந்த மேஜிக்...? அப்பா இயக்குநர், அம்மா கதாசிரியர், தாய்மாமா பின்னணிப் பாடகர். இப்படியொரு கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு சினிமா ஆசை வராமல் போனால் தான் ஆச்சர்யம்! பள்ளி விடுமுறை நாட்களில் மகனை, ஷூட்டிங் கூட்டிப் போக, விஜய்க்கு அந்த உலகம் பிடித்திருந்தது. அம்மா, சினிமாவுக்காக எழுதிய கதைகளில் வரும் புரட்சிகரமான ஹீரோக்களுக்கு; விஜய் என்கிற பெயரை சூட்டி அழகு பார்த்தார். ஹீரோவின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் மகனை, சின்ன வயசு ஹீரோவாக நடிக்க வைத்து பூரிப்படைந்தார் அப்பா. இதெல்லாம் சிறுவனாக இருந்த விஜய்யின் சினிமா ஆர்வத்தை தூண்டியது. விஜய்யின் முதல் படம் எது? என்று கேட்டால், எல்லோரும் சிறு யோசனைக் கூட இல்லாமல் நாளைய தீர்ப்பு என்று சொல்வார்கள். அவர் கதாநாயகனாக அறிமுகமான படம் அதுதான்.

ஆனால், அது அவர் முதல் படம் இல்லை! அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில், விஜயகாந்த ஹீரோவாக நடித்த, 1984-ம் ஆண்டு வெளியான ‘வெற்றி’ என்கிற படத்தில் சின்ன வயசு விஜயகாந்தாக நடித்தார் விஜய். ஸ்கிரீனில் விஜய்யின் முதல் என்டரியே ‘வெற்றி’ தான்! பழம்பெரும் நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்த அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 500 ரூபாய்..! இது தான்; விஜய்யின் முதல் சம்பளம். பிறகு... குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலைகாட்டினார் விஜய். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடிக்க வைத்தாலும்; மகனை, சினிமாவில் இறக்கிவிட பெற்றோருக்கு விருப்பமில்லை! பெரிய படிப்பு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும்; விஜய்யை, லயோலா கல்லூரியில் சேர்த்து விட்டனர். ஆனால், விஜய்யோ சினிமா கனவில் மிதந்தார். பெற்றோரின் கட்டாயத்தில்; ஏதோ பெயரளவுக்கு காலேஜ் போய் வந்தார். பிறகு, எப்படி சினிமாவிற்குள் விஜய் வந்தார்?

அடுத்த பகுதியில்