தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்..! 

 
நடிகர் விஜய் நடித்த ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியான போது அந்த பாடலில் உள்ள சில சர்ச்சைக்குரிய வரிகளை குறிப்பிட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆர்கே செல்வம் என்பவர் புகார் அளித்த நிலையில் தற்போது விக்ரம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே நபர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் நடித்த ’வீர வீர சூரன்’ என்ற படத்தின் வீடியோ வெளியான நிலையில் அந்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று ஆர்கே செல்வம் என்பவர் தனது புகாரில் கூறியுள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

இணையதளத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டினால் அதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சமூக வலைதளங்களில் கத்தியை வைத்து கொண்டு ரீல்ஸ் போட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.  

அதேபோல், கத்தியை வைத்து புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பகிர்ந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தற்போது வீரதீர சூரன் படத்தின் போஸ்டரில் கத்தியை இரண்டு கையில் வைத்துக் கொண்டும் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்லும் வகையில் விக்ரம் செயல்பட்டு வருகிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் 1860 கீழ் 326 படி இது தவறு. தகவல் தொழில்நுட்ப தடுப்புச் சட்டம் 2000 கீழ் 66(a), சமூக வலைதளங்களில் அதை கண்டு இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை தூண்டும் வகையில் உள்ளதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  தவறானது.  

எனவே விக்ரம், இயக்குநர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், தகவல் தொழில்நுட்பம் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆர்கே செல்வம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.