தணிக்கைச் சான்றிதழால் எழுந்த சர்ச்சை : பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் அமீர் தானா? 

 

‘பருத்திவீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி என பலர் விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், பொது வெளியில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ‘பருத்திவீரன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சான்றிதழில் படத்தின் தயாரிப்பாளர் பெயர் இடம்பெரும் இடத்தில் இயக்குனர் அமீரின் பெயரும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இடம்பெரும் இடத்தில் டீம் ஒர்க் புரொடக்ஷன் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் தணிக்கை சான்றிதழில் ஞானவேல்ராஜாவின் பெயரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாததால், அமீர்தான் படத்தின் தயாரிப்பாளரா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் இந்த புகைப்படத்திற்கு ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.