பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்..!

 

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள சரக்கு திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். அதில் சில அசாம்பாவிதங்கள் நடந்துவிட்டது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணுக்கு நான் மலர்மாலை அணிவித்தேன். அப்படி செய்யக் கூடாதாம். அது எனக்கு பின்னர் தான் தெரிந்தது. நான் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். நான் விளையாட்டாக செய்தது, விபரீதமாக ஆகிவிட்டது. இன்று சோஷியல் மீடியாவில் அதை பெரிதாக காட்டுகிறார்கள்.

இதனால் எனக்கு மனதில் ரொம்ப கஷ்டமாகிவிட்டது. கூல் சுரேஷ் நிகழ்ச்சி என்றாலே சந்தோசமாக தான் இருக்கும். ஆனால் இது அதற்கு மாறாக அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தால் மற்றவர்கள் முகம் சுழிக்கும் படி ஆனது, எனக்கு சங்கடமாக உள்ளது. அந்த பெண் தொகுப்பாளரின் பெயர் எனக்குத் தெரியவில்லை. அவரிடம் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்திற்கும் அண்ணன் மன்சூர் அலிகானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம்.

அந்த பெண் எனக்கு பரிட்சையம் இல்லாதவர். நிகழ்ச்சி தொடங்கும் முன் அவருடன் சேர்ந்து நடனம் எல்லாம் ஆடினேன். டான்ஸ் ஆடியதால், அவர் ஜோவிலாக இருப்பார் என்று நினைத்து அப்படி செய்துவிட்டேன். நான் மலர்மாலை போட்டதும் அந்த பெண் உடனே ரியாக்ட் செய்துவிட்டார். கூல் சுரேஷ் ஏதாவது செய்தால் கிறுக்குத்தனமாக செய்வான் என்று தான் நீங்கள் அனைவரும் எடுத்துக் கொள்வீர்கள். அப்படி நினைத்து தான், நானும் வேடிக்கையாக செய்தேன். ஆனால் ஒரு பெண்ணுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து பார்க்கவில்லை.

நடிப்பால் என்னால் மேலே வரமுடியவில்லை. அதற்காக தான் இந்த மாதிரி கோமாளித் தனங்களை செய்து என் பிழைப்பை நடத்தி வருகிறேன். சரக்கு படத்திற்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். நான் தான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு. அதனால் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என் செய்கை அவர்களுக்கு தவறான உதாரணமாக போய்விடக் கூடாது. என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் என்னிடம் கூறினார்கள், ‘நீ செய்தது பெரிய தவறு’ என்று. என்னுடைய மனைவியும் இதை கண்டித்தார். நான் ரொம்ப விளையாட்டுத் தனமாக இதை செய்துவிட்டேன். மற்றவர்களை ஊக்குவித்து தான் நான் வழக்கமாக பேசுவேன். அவர்களுக்கு பாசிட்டிவ்வாக தான் பேசுவேன். இந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது மன வருத்தமாக உள்ளது, மறுபடி என்னை மன்னித்துவிடுங்கள்,’’ என்று அந்த வீடியோ கூல் சுரேஷ் பேசியுள்ளார்.