கூலி படம் வெற்றி பெற வேண்டும் : ரஜினிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளோடு வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள வெயில் உகந்த அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்து அங்க பிரதட்சணம் செய்து இறுதியில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 

ஒவ்வொரு ரஜினி திரைப்படம் வெளிவரும் போதும் இதேபோன்று ரஜினி ரசிகர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வெயில் உகந்த அம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கூலி திரைப்படம் 1200 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் ஆகி மாபெரும் வெற்றி பெற வேண்டும் எனவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடு உடல் நலத்தோடு வாழ வேண்டும் எனவும் அங்க பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளோம். எங்களுடைய பிரதான கோரிக்கை என்னவென்றால் மதுரையைச் சேர்ந்த அவரது தீவிர ரசிகர்கள் ஒவ்வொருவரையும் குடும்பத்தினரோடு சேர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ரஜினி ரசிகர்கள் மன்ற மாவட்ட துணைத் தலைவர் அழகர்சாமி, பால நமச்சிவாயம், ஹரிஷ், கோல்டன் சரவணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் அனிருத் சாமி தரிசனம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜும் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.