இயக்குநர் ராஜமவுலி தந்தைக்கு கொரோனா உறுதி..!

 

பாகுபலி படங்களின் கதையாசிரியரும் இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்த விஜயேந்திர பிரசாத், அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆவார். உலகளவில் இந்திய சினிமாவுக்கு அடையாளமாக அமைந்த பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கான கதையையும் இவர் தான் எழுதினார்.

அண்மையில் கங்கனா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் திரைக்கதையையும் இவர் தான் எழுதியுள்ளார். அதற்கான ப்ரோமோஷன் பணிகளுக்கான சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அவர் சென்று வந்தார். இந்நிலையில் தற்போது விஜயேந்திர பிரசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னுடன் கடந்த நாட்களில் தொடர்பில் இருந்தவர்களையும் அவர் பரிசோதனை செய்துகொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். தலைவி பட ப்ரோமோஷனுக்கான நிகழ்ச்சிகளில் நடிகை கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, இயக்குநர் எ.எல். விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.