கேப்டன் கூறிய அந்த வார்த்தை எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தந்தது  - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்..!
 

 

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காத முடியாத திரையிலகினர் பலர், சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "விஜயகாந்த் சார் சினிமாத் துறையின் மிகப்பெரிய இழப்பு. நான் குறும்படம் செய்து கொண்டிருக்கும் காலங்களில் கேப்டன் தொலைக்காட்சிக்கு 'நீறு' என்ற ஒரு குறும்படம் அனுப்பி வைத்தேன். அப்போது தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அணைத்து படங்களையும் விமர்சனம் செய்து கொண்டிருந்த அவர் 'நீறு' என்ற குறும்படத்தை இயக்கியது யார்? என்று கேட்டார், அப்போது கண்டிப்பாக நீ படம் பண்ணிவிடுவாய் என்று கூறினார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய ஊக்கமாக இருந்தது" என்று பேசினார்.

விஜயகாந்தின் மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர்.

வாழும்போதே கருப்பு எம்ஜிஆர் என்ற போற்றுதலுக்கு உள்ளான அவரின், சிறப்பான செயல்பாடுகளே தற்போது அவரை இறந்த பின்பும் கொண்டாட செய்துள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செய்ய குவிந்த பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு சாட்சிகளாக உள்ளனர்.