வேள்பாரி படத்தை இயக்கும் ஷங்கர்- மணிரத்னம் அறிவிப்பு..!!

சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குநர் ஷங்கர் படமாக்கவுள்ளார் என்கிற தகவலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
 
 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் 2 பாகங்கள் கொண்ட படமாக தயாரிக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இதனுடைய இரண்டாவது பாகம் வரும் 28-ம் தேதி வெளிவருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் இந்தியளவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் பி.எஸ் 2 படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய மணிரத்னம், வேள்பாரி நாவலை இயக்குநர் ஷங்கர் படமாக்கவுள்ளார். அது தமிழின் முக்கியமான படமாக அமையும் என்று கூறினார். ஏற்கனவே வேள்பாரி நாவலை ஷங்கர் படமாக்கவுள்ளது தொடர்பான தகவல் கூறப்பட்டு வந்தது. அதை இயக்குநர் மணிரத்னம் உறுதி செய்துள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதிய நாவல் வேள்பாரி. இது ஆனந்த விகடன் வார இதழில் தொடர் கதையாக வெளியாகி வந்தது. அதை 2017-ம் ஆண்டு புத்தமாக தொகுத்து இரண்டு பாகங்கள் கொண்ட நாவலாக வெளியிடப்பட்டது.

தமிழக வாசகர்களிடையே இந்நாவலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நாவலை விரும்பி படித்தனர். அது திரைப்படமாக தயாராகவுள்ளது  வேள்பாரி வாசகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.