தென் கொரியா வரை சென்று கதாநாயகியை கண்டுப்பிடித்த இயக்குநர் ஷங்கர்..!

 

தெலுங்கில் ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தில் தென் கொரிய சினிமாவில் பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கப்படாத நிலையில், தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை தொடங்க முனைப்பு காட்டி வருகிறார் ஷங்கர். இடையில் தமிழில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் அவர் இயக்குகிறார். இதில் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ஷங்கர் இயக்கும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை பே சூசி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் இவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரமா? என்பது தெரியவில்லை. தென் கொரியாவில் முன்னணி நடிகையான பே சூசி, கொரியன் மொழியில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அங்கு பிரபல மாடலாகவும் உள்ளார்.