தன் குடும்பம், பசங்க, தன் சாமி, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும்... இது தான் மயில்சாமி..!! 

 

மயில்சாமியின் இழப்பு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அரசியல் தலைவர்கள்,  திரைத்துறையினர் எனப் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மயில்சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சித்தார்த் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த், அவர் எனக்கு அவ்வளவு நல்ல நண்பர். தமிழ் திரையுலகை தன் குடும்பமாகப் பார்ப்பார். அவ்வளவு பெரிய மனது கொண்டவர். மாபெரும் சிவபக்தர். தன் குடும்பம், பசங்க, தன் சாமி, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும்... இது தான் மயில்சாமி. இந்த இழப்பைத் தாங்க அவரது குடும்பத்துக்கு இறைவன் சக்தி கொடுக்கட்டும். அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை கண்ணீருடனும் சிரித்த முகத்துடனும் அவரை அனுப்பி வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் இல்லத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"மயில்சாமியின் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி. திரையுலகில் மட்டுமல்ல அத்தனை பேருக்கும் பெரிய இழப்பு, நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி மிக மிக நல்லவர், நல்ல மனது கொண்டவர்.

அவருடன் நான் அதிகம் பழகியிருக்கிறேன். எல்லோருடனும் பாசமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகுவார். என்னிடம் 10 நாளைக்கு ஒருமுறை ஃபோனில் பேசிவிடுவார். அப்போதும் தன் குடும்பத்துக்காகவோ, அவருக்காகவோ எதுவும் கேட்க மாட்டார். பொது நலனுக்காகவே பேசுவார். என்னுடைய குடும்பத்தின் மீதும் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் என அனைவர் மீதும் அன்பு செலுத்தக் கூடியவர். அவரை இழந்து வாடுபவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

பொதுவாக என் மனசு தங்கம். நெஞ்சுக்கு நீதி படங்களில் இணைந்து நடித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பு முழுவதும் என் கூடவே இருந்தார். என் அண்ணன் போன்றவர், ரொம்ப பாசமாக இருப்பார். படங்களில் நடிப்பது தவிர்த்து ஃபோனில் அழைத்து அவ்வளவு பேசுவார்” எனத் தெரிவித்துள்ளார்.