தமிழ், மலையாளம், இந்தி என ஒரே நேரத்தில் தயாராகும் த்ரிஷ்யம் 3..!!

த்ரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தன. இதையடுத்து மூன்றாவது பாகத்துக்கான பணிகள் மும்முரமாக துவங்கியுள்ளது.
 

இரண்டாம் பாகத்தை தொடர்ந்து த்ரிஷயம் படத்தின் மூன்றாவது பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், ஒரே நேரத்தில் தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுகிறது.

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’.  இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. வெறும் ரூ. 5 கோடியில் எடுக்கப்பட்ட த்ரிஷ்யம் படம், ஒட்டுமொத்தமாக ரூ. 75 கோடி வசூல் சாதனை புரிந்தது. 

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு, அனைத்து பதிப்புகளும் வெற்றி அடைந்தன. பின்னர் சீன மொழியிலும் த்ரிஷ்யம் படம் ரீமேக் செய்யப்பட்டது. அங்கும் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைத்தது.

இதையடுத்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம், கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓஒ.டி.டி-யில் வெளியானது. இதற்கும் ரசிகர்களிடம் தாறுமாறாக வரவேற்பு கிடைத்தது. உடனடியாக தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது.

ஆனால் தமிழில் இன்னும் த்ரிஷயம் 2 ரீமேக் செய்யப்படவில்லை. அதற்கு காரணம் முதல் பாகத்தில், கதாநாயகன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருப்பார். அதனால் த்ரிஷ்யம் 2 படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடியாமல் போனது என்று படக்குழு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் த்ரிஷ்யம் 3 கதை தயாராக இருப்பதாக இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மேலும் மூன்றாவது பாகத்தை மலையாளம், தமிழ் உட்பட தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரேநேரத்தில் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் த்ரிஷ்யம் 3 படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.