எல்லா திரையரங்குகளிலும் அனுமாருக்கு ஒரு காலி இருக்கை - ‘ஆதிபுருஷ்’ படக்குழு அறிவிப்பு..!!

ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் நாளில், அனைத்து திரையரங்குகளிலும் ஒரு காலியான இருக்கை விடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
 

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயண இதிகாசத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு படமாக உருவாக்கியுள்ளனர். பிரபாஸ், சையிஃப் அலி கான், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

வரும் 16-ம் தேதி நேரடியாக திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. தேசியளவில் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படத்தை காண பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் ஆதிபுருஷ் படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கை கடவுள் ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.