பிரபல திரைப்பட பாடலாசிரியர் பிறைசூடன் காலமானார்..!!

 

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பிறைசூடன் பிறந்தார். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.

தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களை இவர் எழுதியுள்ளார். பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’  உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ள பிறைசூடன், தற்போது வரை தனது எழுத்துப்பணியை தொடர்ந்து வந்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்துரைக்கும் குழுவில் அவர் இடம்பெற்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4.15 மணியளவில் தனது குடும்பத்த்னருடன் பேசிக்கொண்டிருந்த போது, பிறைசூடன் காலமானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.